அழகன்குளத்தைச் சேர்ந்தவர்களின் தொடர்பு எண்கள் (துபாய்) அழகன்குளம் - முக்கிய தொலைபேசி எண்கள்
User : Guest | Login
Chennai | Mumbai | India Classifieds | Dubai | Hong Kong | Abu Dhabi | Sharjah | Manama Riyadh | General Knowledge

அழகன்குளம் அகழ்வாய்வு பற்றி திரு.டி.எஸ்.ஸ்ரீதர் இஅப, சிறப்பு ஆய்வாளர், தொல்பொருளாய்வுத்துறை, தமிழ்நாடு அரசு. வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் அழகன்குளம் பற்றிய சில பக்கங்கள் இங்கு படங்களாக இங்கு தரப்பட்டுள்ளன.

அழகன்குளம் அகழ்வாய்வறிக்கை, திரு.டி.எஸ்.ஸ்ரீதர், IAS


அழகன்குளத்தில் நடந்துவந்த அகழ்வாராய்ச்சி பற்றி நான் அகத்தியர் குழுமத்திற்கு எழுதிய மின்னஞ்சலின் ஒரு பகுதி, நான் அழகன்குளம் பற்றி தேடிக்கொண்டிருக்கும் பொழுது ஏதேச்சையாகக் கிடைத்தது... இங்கே

நான் அழகன்குளத்தைச் சார்ந்தவன் என்று எழுதியதுமே டாக்டர்.ஜெயபாரதி அவர்கள் அவர்களுடைய அழகன்குளம் பற்றிய தொடர்பை எழுதியிருந்தார்..

மலேசியாவில் வசிக்கும் டாக்டர் ஜெயபாரதி அவர்கள் எழுதியகுறிப்பு


சுங்கைப் பட்டாணியில் அழகன்குளம் ஜெமாஅத் இருக்கிறது. அழகன் குளத்தைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் பெரிய டாக்டர்களாக இருக்கிறார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர் டத்தோ டாக்டர் ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹ் அல் ஹஜ், அழகன்குளத்தைச் சேர்ந்தவர்தாம். அவருடைய திருமணத்திற்கு வந்திருக்கிறோம். அப்போது வைகையைக் கடந்து மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும்.

அது 1968 வருடம் என்று நினைக்கிறேன். இராமநாதபுரம் வந்து அங்கிருந்து 10 மைல் சென்று, ஓரிடத்தில் இறங்கி, வைகையில் இறங்கி நடந்தே
கடந்து சென்றோம். திரும்பும்போது மாட்டுவண்டியில் வந்து பஸ் ஏறிக்கொண்டோம்.

அழகன்குளம் மிகப்பெரிய ஊராக இருந்திருக்கவேண்டும். தமிழகக் கடற்கரைப்பகுதிக்கு ஒரு வினோதத் தன்மை உண்டு. ஒரு பக்கம் கடலுக்குள் நிலம் சரிந்து செல்லும். இன்னொரு பக்கம் மேடிட்டுக்கொண்டிருக்கும். ராமநாதபுர மாவட்டத்தில், ராமேஸ்வரத்தை நோக்கி ஒரு நிலப்பகுதி - ஒரு குட்டி தீப கற்பம் - நீட்டிக்கொண்டிருக்கும். பார்ப்பதற்கு சிறிய மாம்பழத்தைச் சப்பிக்கொண்டிருக்கும் மனிதனின் உதடுபோல இருக்கும்.

அந்த உதட்டுப் பகுதியின் வடக்கு தெற்கு ஆகிய பகுதிகளில் சில பெரிய துறைமுகங்கள் இருந்தன. அங்கெல்லாம் சோணகர்களின் குடியேற்றங்கள் இருந்தன. அவர்களின் மக்கள் தொகை கணிசமான அளவுக்கு இருந்திருக்கவேண்டும். ஒரு காலகட்டத்தில், அராபியர்கள் இருபதினாயிரம் குதிரைகள் கொண்ட பெரிய படையைக் கொண்டுவந்து அந்த பகுதியைக் கைப்பற்றி, தங்கள் ஆட்சியின்கீழ் பன்னிரண்டு ஆண்டுகள் வைத்திருந்தனர். பின்னர் பாண்டியர்கள் அதனை மீட்டுக் கொண்டனர்.


12 டிசம்பர் 2002 அன்று அகத்தியர் மின்குழுமத்தில் பரமேஸ்வரனால் எழுதப்பட்டது.


அழகன்குளத்தில் தற்சமயம் அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டது. சில ஆண்டுகள் நடந்த ஆய்வில் ஊரைச் சுற்றி பல இடங்களில் பூமியைத் தேண்டி..அங்கிருந்து ஓடுகள், தொண்மையான காசுகள், மற்றும் பல தொல்பொருட்களை எடுத்தனர். நான் அப்பொழுது உயர் நிலைப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தேன். ஆய்வு எங்கள் பள்ளி வளாகத்தினுள்ளேயும் நடந்தது.

ஊருக்கு வெளியே கோட்டை மேடு என்னும் பகுதி உள்ளது. அங்கு எங்கள் ஊரை ஆண்ட மன்னர்களின் கோட்டை அங்கேயிருந்ததால் அது கோட்டைமேடு என்று ஆகியதாக இன்றும் கூறுவர். அந்த மேட்டிலும் அகழ்வாய்வு நடந்தது.

அழகன்குளம் சில ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர்ப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட நகராக இருந்திருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். பட்டினப்பாலை யாக இருக்கவேண்டும் (நீண்ட காலம் ஆகிவிட்டபடியால் சரியாக ஞாபகத்தில் இல்லை)அதில் ஒரு பாடல், வைகை நதி கடலில் கலக்கும் இடத்தில் இருந்த இந்த மருங்கூர்ப்பட்டினம் என்னும் துறைமுக நகரைப் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது. அது ரோமானியர்கள், சுமேரியர்களுடன் நீண்ட நெடுங்காலமாக வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. (தொல்பொருளாய்வு சம்பந்தப்பட்ட விழா ஒன்றின்போது அவர்கள் வினியோகித்த துண்டு அறிக்கையில் தந்த செய்தி இது)

அழகன்குளத்தில் ஒரு விதமான ஓடுகள் பூமியில் கிடக்கும் அவை, பீங்கான் கற்களைப் போல ஆனால் சுட்ட ஓடுகளால் ஆனவை. அவற்றை சேகரித்து (சிறுவர்களாக இருக்கும் பொழுது) சாலையில் வீசினால் வெள்ளிக்காசுகளை அள்ளி வீசினால் வரும் ஓசையை போல கலகலவென்று கேட்கும். இந்த ஓடுகளைப் பார்த்துத் தான் அழகன்குளத்தில் அகழ்வாய்வே நடத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது.

அழகன்குளம் உயர்நிலைப் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிந்த ஒருவர் இத்தகைய ஓடுகளை பொருக்குவதில் அதிகம் ஆர்வம் செலுத்தினார். அதனால் அவருக்கு கல்பொருக்கி என்ற பட்டப்பெயரும் வழங்கிவந்தது. அவர் பொருக்கி வைத்திருந்த பல கற்கள் அகழ்வாய்வுத்துறையில் பெற்றுக்கொள்ளப்பட்டன. அவருக்குக் கூட அத்துறையிலிருந்து சான்றிதழ் தந்து கவுரவித்ததாக எனக்கு ஓர்மையுண்டு. (ஜம்முநிஷா பேகம் என்ற மாணவிக்கும் அகழ்வாய்வுத்துறை அவர் சேகரித்து வைத்திருந்த பழம்பொருட்களைப் பெற்றுக்கொண்டு சான்றிதழ் தந்து கவுரவித்தது)

இந்த ஓடுகள் உடைந்த மண்பாண்டங்களாக இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதினர். இவை உயரிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருந்திருக்கவேண்டும். நமது மண்பானையோடுகளையும் இவைகளையும் ஒப்புநோக்கின் அவற்றின் தரம் எளிதில் விளங்கும்.

இவை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாக இருந்திருக்கலாம் அல்லது இத்தகைய பாண்டம் செய்யும் தொழில்பட்டறை இங்கு இருந்திருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதினர். அது மட்டுமல்லாது அழகன்குளத்தில் சங்குகளை அறுத்து ஆபரணங்கள் செய்யும் தொழில்பட்டறை இருந்தது, இன்று அறுத்த சங்குகள் அழகன்குளம் முழுவதும் சிதறிக்கிடப்பதைக் காணலாம்.

வலையில் அழகன்குளம் (alagankulam) என்று தேடினால் பல ஆய்வு முடிவுகள் அகப்படலாம்..

அழகன்குளம் கிராமத்தில் மட்டுமே வைகை வற்றாத ஜீவ நதி. கடலிலிருந்து நீர் வைகை ஆற்றுக்கு வருவதைக்காணலாம். அதனல் எங்களுக்கு வைகை வற்றியது கிடையாது கடலிலிருந்து ஆறு முதல் ஏழு கிலோமிட்டர் தூரத்துக்கு இந்த நீர் வரத்து இருக்கும். ஆண்டுமுழுதும் இது உப்பளங்களுக்கும் மீன் பிடித்தலுக்கும் பயன்படுகிறது.

 

 

 
 
 

 

பிற பக்கங்கள்
கு.நாகவள்ளி
 
நிர்வகிப்பது : பரமேஸ்வரன் மாணிக்கம் 10/28 பஜனைமடத்தெரு, அழகன்குளம்,இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி எண் : +971-50-7974298 (துபை செல்பேசி)
Home | Privacy Policy | Disclaimer | Send Your Comments
©Copyright alagankulam.com 2001